×

தீபாவளியையொட்டி விலை உயர்கிறது குடோன்களில் காத்திருக்கும் 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள்

Yellow, Godownஈரோடு : தீபாவளியையொட்டி மஞ்சள் விலை உயர வாய்ப்பு உள்ளதால் 5 லட்சம் மூட்டைகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இருப்பினும், ஈரோடு மஞ்சள் தனித்துவம் வாய்ந்தது என்பதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மஞ்சளில் கோ 1, பிஎஸ்ஆர் 1,2, ரோமா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி என பல்வேறு ரகங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் ஈரோடு லோக்கல், பிடிஎஸ் 8, பிடிஎஸ் 10 ஆகிய 3 ரகங்கள் தான் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

இதுதவிர, சேலம் மாவட்டத்தில் மட்டுமே விளையக்கூடிய சேலம் ரகம் என்ற ஒரு ரகமும் உள்ளது. மற்ற ரகங்களை காட்டிலும் இந்த சேலம் ரகமானது பெருவட்டாக இருப்பதாலும், குர்குமின் அளவு அதிகமாக உள்ளதாலும் விலையும் மற்ற மஞ்சளை விட சராசரியாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக விற்பனையாகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சளை விற்பனை செய்வதற்காக ஈரோட்டில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபி கூட்டுறவு சங்கம், ஈரோடு கூட்டுறவு சங்கம் என 4 ஏல மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டுகளில் மஞ்சள் விலையானது, குவிண்டால் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் இந்தாண்டு கடந்த மார்ச் மாதத்தில் வரலாறு காணாத வகையில் குவிண்டால் ரூ.21 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக மஞ்சள் பயிரிடுவதில் இருந்து விலகி இருந்த விவசாயிகள் மீண்டும் தற்போது மஞ்சளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அந்தியூர், தாளவாடி, பவானி, கோபி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சாகுபடி பரப்பளவானது அதிகரித்துள்ளது.

தற்போது குவிண்டாலுக்கு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தீபாவளி சீசனில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இந்த விலை உயர்வை எதிர்பார்த்து ஈரோட்டில் உள்ள குடோன்களில் 5 லட்சம் மூட்டைகள் காத்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கடந்த காலங்களில் மஞ்சள் சாகுபடி பரப்பளவானது தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அதிகரித்ததன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சள் விலையானது தொடர் சரிவை நோக்கி சென்றது. முதலீட்டு செலவுக்குகூட விலை கட்டுப்படியாகாததால் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறையத்தொடங்கியது. இதன்விளைவு இந்தாண்டு விலை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மஞ்சள் தேவை அதிகரித்ததால் வரலாறு காணாத அளவிற்கு மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

இதில், சேலம் ரகமானது குவிண்டால் ரூ.21 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. கடந்தாண்டுகளில் சீசன் நேரத்தில் குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் 3 மடங்கு உயர்ந்ததால் இந்தாண்டு மஞ்சள் சாகுபடி பரப்பளவானது உயர்ந்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் தர்மபுரியிலும், கர்நாடக மாநிலத்திலும் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் அடுத்தாண்டு சந்தையில் எதிரொலிக்கும். எனவே, அதற்கு முன்பாக குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சள் மூட்டைகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை விவசாயிகளும், வியாபாரிகளும் மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி மஞ்சள் விலையானது உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் விலை சற்று குறைந்து மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இந்த விலையேற்றம் தீபாவளி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. குவிண்டால் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1,500 வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயரும் பட்சத்தில் குவிண்டால் ரூ.16,500 தாண்டி விற்பனையாகும். விலை உயர்வை எதிர்பார்த்து குடோன்களில் சுமார் 5 லட்சம் மூட்டைகள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பல குடோன்களில் இருப்பு

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், பார்க்ரோடு, நசியனூர் ரோடு, பெருந்துறை என பல்வேறு பகுதிகளில் மஞ்சள் குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் கடந்த பல ஆண்டுகளாக மஞ்சள் மூட்டைகள் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஈரோட்டில் மட்டும் 4 லட்சம் முதல் 5 லட்சம் மூட்டைகள் இருப்பு இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விதை மஞ்சள் விலையும் உயர்வு

மஞ்சள் விற்பனை விலை உயர்ந்துள்ளதால் இந்தாண்டு சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது. இதனால், விதை மஞ்சள் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் ஒரு கிலோ விதை மஞ்சள் ரூ.40க்கு விற்பனையான நிலையில், ஜூலை மாதத்தில் ரூ.70 ஆக உயர்ந்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களிலும் விதை மஞ்சளுக்கான தேவை இந்தாண்டு அதிகரித்து காணப்பட்டது.

The post தீபாவளியையொட்டி விலை உயர்கிறது குடோன்களில் காத்திருக்கும் 5 லட்சம் மஞ்சள் மூட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Erode ,Tamil Nadu ,Salem ,Namakkal ,Tirupur ,Coimbatore ,Dharmapuri ,Krishnagiri ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு SETC பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்