×
Saravana Stores

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க ரூ.750 கோடி செலவு பண்ணியிருக்கோம்… ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல… அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

வேலூர்: ‘தமிழ்நாட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க ரூ.750 கோடி தமிழ்நாடு அரசு செலவு செய்து உள்ளது. ஒன்றிய அரசிடம் கேட்டும் இதுவரை ஒரு ரூபாயை கூட தரவில்லை’ என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
வேலூரில் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் லைட்ஸ் தரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கட்டிட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மழையின்போது தென் மாவட்டங்களான தூத்துகுடி, திருநெல்வேலி, ஊட்டி ஆகிய இடங்களில் பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளது. இவை மாநில அரசு நிதியின் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சரை அழைத்து சென்று காட்டியும் நிவாரண நிதி வழங்கவில்லை. சாலைகளை அமைக்கவும் நிதி வழங்கவில்லை. எத்தனை முறைதான் நிதி கேட்பது. ஒன்றிய அரசை குறை கூறும் நோக்கில் இதை சொல்லவில்லை. இந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.750 கோடி செலவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல பாலங்கள் வேகமாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

கடந்த ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நில எடுப்பு செய்யாமலேயே டெண்டர் பணிகளை செய்துவிட்டனர். தற்போது அதற்கான நில எடுப்பினை செய்து பாலம் முழுமை பெற சிறப்பு வருவாய் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர் தான். அது முதலமைச்சரின் அதிகாரம். அவர் முடிவு செய்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். ஒன்றிய அரசு சார்பில் அனைத்து மாநில அமைச்சர்களுடன் வரும் 30ம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் நான் கலந்துகொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

* ‘காலாவதியான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு மூடாதாம்’
அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும் என பல முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும், நேரிலும் வலியுறுத்தினோம். ஆனால் ஒன்றிய அரசு, சுங்கச்சாவடிகளை மூட முடியாது என கூறி வருகிறது. சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை’ என்றார்.

The post தமிழ்நாட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க ரூ.750 கோடி செலவு பண்ணியிருக்கோம்… ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல… அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union government ,Minister ,AV Velu ,Vellore ,Tamil Nadu government ,Pentlend Government Hospital ,Tamilnadu ,EV Velu ,
× RELATED ப்ரீபெய்ட் மீட்டரை பயன்படுத்தி...