சென்னை: தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் தேவநாதன், தேவசேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய மூன்று பேரையும் 4 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த மனுவில், தேவநாதன் 17 ஐடிகளை பயன்படுத்தி 21,360 பேரிடம் சுமார் 300 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளார். 300 கோடி ரூபாய் தொடர்பான விவரங்கள் அவர்களின் நிதி நிறுவன வங்கி கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த விசாரணையின்போது தெரியவந்தது.
இந்த வங்கி மோசடி தொடர்பாக தேவநாதனின் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 6 லாக்கர்களை திறக்க உள்ளோம். மேலும் 300 கோடி ரூபாயை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, தேவநாதன் உள்பட மூவரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது தேவநாதன் உள்பட 3 பேரும் நேரில் ஆஜர்படுத்தபட்டனர். இதையடுத்து, மூவரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ரூ.300 கோடி எங்கே? தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.