×
Saravana Stores

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

சென்னை: சிப்காட் நிறுவனமானது, 2022ம் ஆண்டில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் மற்றும் டைடல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற சிறப்பு நோக்க முகமையை தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை தொழிலாளர் நலனுக்காக உருவாக்கியது. தற்போது, இந்த சிறப்பு நோக்க முகமை, சிறுசேரி (807 படுக்கை வசதிகள்), கங்கைக்கொண்டான் (870 படுக்கை வசதிகள்), சூளகிரி (1495 படுக்கை வசதிகள்), இருங்காட்டுக்கோட்டை (801 படுக்கை வசதிகள்) மற்றும் செய்யாறு (441 படுக்கை வசதிகள்) ஆகிய 5 சிப்காட் தொழிற் பூங்காக்களில் குடியிருப்பு வளாகங்களை ரூ.204.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மொத்தம் 4,414 படுக்கை வசதிகளுடன் அமைத்து வருகிறது.

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டிபி. சோலார் நிறுவனம், அதனுடைய 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் பிவி செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி வசதியை ரூ.4,300 கோடி முதலீட்டில், 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. இதில் டிபி. சோலார் நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சிப்காட் நிறுவனத்தின் சிறப்பு நோக்க முகமையான தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொழில்துறை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் நேற்று மேற்கொண்டது. இந்நிகழ்ச்சியில் தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.சினேகா, டாடா பவர் நிறுவன மனித வள மேம்பாடு முதன்மை அலுவலர் அனுபமா ரட்டா, டாடா பவர் சோலார் முதன்மை செயல் அலுவலர் பாலாஜி பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

The post கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Gangaikondan Chipgat Industrial Park ,Minister ,D.R.P.Raja ,CHENNAI ,ChipCot ,Tamil Nadu Infrastructure Fund Management Corporation ,Tidal ,Tamil Nadu Industrial Housing Private Limited ,Tamil Nadu ,Gangaikondan Chipgat ,Industrial Park ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளுடன் தான் போட்டி : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா