சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தலித்துகளை தாண்டி, ஈழப்பிரச்னை, இடஒதுக்கீடு, மது ஒழிப்பு என பல அவதாரங்கள் எடுக்கிறார். தற்போது அவர் நடத்தும் மது ஒழிப்பு போராட்டம் என்பது கொள்ளையர்களுடன் சேருவதற்கான கூட்டமோ, மாநாடோ அல்ல, கொள்கை வழிப் போராட்டம் என்று திமுக வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் கூறினார். சென்னை கலைஞர் நகர் தெற்கு பகுதி செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதிச் செயலாளர் கண்ணன் தலைமையில் 80 அடி சாலை சாலிகிராமம் கோல்டன் பேரடைஸில் நடைபெற்றது. இதில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது:
சில்லறை மதுபான கடைகளை அரசே நடத்தட்டும் என 2003 நவம்பர் 29ல் உத்தரவிட்டது ஜெயலலிதாவின் அதிமுக அரசுதான். அதுமுதல் அரசாங்கம் மதுவை விற்றுக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் பொருளாளராக இருந்த திமுக 1971-ல் மதுவை கொண்டு வந்தது. 1974ல் எம்.ஜி.ஆர் இல்லாத திமுக, மதுவை மூடி சீல் வைத்தது. அதன்பின் எம்ஜிஆர் 1981 பிப்ரவரி 21-ல் சாராயத்தை கொண்டு வந்தார். 1983ம் ஆண்டு மே 23ம் தேதி டாஸ்மாக் என்பதை கொண்டு வந்து, எல்லா சில்லறை கடைகளும் டாஸ்மாக்கில்தான் வாங்கவேண்டும் என்றார்.
அதன்பின் 2003ல் நவம்பர் 29ம் தேதி, சில்லறை கடை கூட தனியாருக்கு வேண்டாம். அரசாங்க ஊழியர்களை வைத்து சாராய சில்லறை வியாபாரத்தை மாற்றிய பெருமை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைத்தான் சாரும். இப்படிப்பட்ட அதிமுகவுக்கு மது எதிர்ப்பில் கலந்து கொள்ள என்ன தகுதி இருக்கிறது? அதிமுகவை நம்பினால் மண்குதிரையை நம்பி, மன்னார் வளைகுடாவில் குதித்தவன் கதையாகத்தான் நடக்கும். அதுதெரியாதவர் அல்ல திருமாவளவன்.
திருமாவளவனுக்கு தலித்துகளை தாண்டி, ஈழப்பிரச்சனை இடஒதுக்கீடு என பல அவதாரங்கள் உண்டு. தற்போது மது ஒழிப்பை கையில் எடுக்கிறார். இந்த போராட்டம், கொள்ளையர்களுடன் சேருவதற்கான கூட்டமோ, மாநாடோ அல்ல, கொள்கை வழி போராட்டம். இவ்வாறு காசி முத்து மாணிக்கம் கூறினார்.
கூட்டத்திற்கு கலைஞர் நகர் தெற்கு பகுதிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா முன்னிலை வகித்தார். தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, பிரபாகரராஜா எம்எல்ஏ, மாநகராட்சி கவுன்சிலர் தனசேகரன் எஸ்.குணசேகரன், கன்னிகை ஜி.ஸ்டாலின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post திருமாவளவனுக்கு பல அவதாரங்கள் உண்டு மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு appeared first on Dinakaran.