×
Saravana Stores

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

* ஆண்டிபட்டியில் ‘நொந்து’ போன நெசவாளர்கள்
* தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, ஒன்றிய அரசு நிதி வழங்காததால் வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு முழுமைப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெசவு பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள், விசைத்தறிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பியுள்ளனர்.

இவர்களில் ஒரு பகுதியினர் விசைத்தறி கூடங்களிலும், மற்றொரு பகுதியினர் சொந்த வீடுகளிலும் தறி அமைத்து துணிகளை தயாரித்து வருகின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் துணி தயாரிப்பு நடைபெறுகிறது. மேலும் விசைத்தறிகள் மூலம் பல்வேறு உயர் ரக காட்டன் சேலைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு அப்போதை மாநில அரசு டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சுமார் ரூ.105 கோடியில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க தீர்மானித்தது.

மேலும் இதற்காக சுமார் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த பூங்காவிற்கு `வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா’ என்றும் பெயரிடப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு 500 நவீன தறிகளும், 83 வீவிங் யூனிட்டுகளும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. ஆனால், இந்த பணிகள் பாதி முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு ஒன்றிய அரசு 40 சதவீதமும், மாநில அரசு 9 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்வது என்றும், எஞ்சிய 51 சதவீத தொகையை நெசவு பூங்கா பங்குதாரர்கள் வங்கிகள் உதவியுடன் வழங்குவது என்றும் திட்டமிடப்பட்டது.

அதன்படி மாநில அரசின் பங்களிப்பு தொகையான ரூ.4.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் பங்களிப்பான 40 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், திட்டப்பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த பங்குதாரர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை. இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது: இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த பகுதியில் கூடுதலாக ஆயிரம் நெசவாளர்கள் நேரடியாகவும், மேலும் ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்துவரும் திமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் செய்துவரும் முயற்சி நம்பிக்கை அளிக்கிறது. எனவே, 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா திட்டத்தை நிறைவேற்றி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Andipatti ,Tamil Nadu government ,Antipatti ,Vaigai Hi-Tech Weaving Park ,Dinakaran ,
× RELATED ராணுவ வாகனம் மற்றும் ரோந்து ஹெலிகாப்டர் வாங்கும் பணி துவக்கம்