×

மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் மாமனாரின் வீட்டை அடித்து நொறுக்கிய ராணுவ வீரர், அவரை தூக்கிச் சென்று நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்த்தாண்டம் முளங்குழி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (70). விவசாயி. அவரது மூத்த மகள் ஹெப்சிபாய். இவருக்கு ஐரேனிபுரம் நெடுவிளையை சேர்ந்த பீட்டர் பிராங்க்ளின் (39) என்பவருடன் திருமணமாகியுள்ளது. ராணுவ வீரரான பீட்டர் பிராங்க்ளின் அசாமில் பணிபுரிந்து வருகிறார். ஹெப்சிபாய் தனது கணவர் வீட்டாருடன் தங்கியுள்ளார். இந்தநிலையில் பால்ராஜுக்கும், பீட்டர் பிரங்க்ளினுக்கும் இடையே பல்வேறு மனஸ்தாபம் காரணமாக அடிக்கடி பிரச்னைகள் வருமாம்.

இதனால் பீட்டர் பிராங்க்ளின் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் மாமனார் பால்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமும் பால்ராஜ் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்த நிலையில் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது போலீசார் பீட்டர் பிராங்க்ளினை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் பீட்டர் பிராங்க்ளின் மாமனார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் அசாமுக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் விடுமுறைக்காக மீண்டும் பீட்டர் பிராங்க்ளின் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை சுமார் 9 மணியளவில் பால்ராஜ் வழக்கம்போல் வீட்டில் இருந்தார்.

அப்போது அதீத மதுபோதையில் அங்கு வந்த பீட்டர் பிராங்க்ளின் கடும் தகராறில் ஈடுபட்டார். இதனை பால்ராஜ் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பீட்டர் பிராங்க்ளின் வீட்டுக்குள் இருந்த மாமனாரை அலேக்காக தூக்கிச்சென்று நடுத்தெருவில் வீசினார். இதில் உருண்டு சென்று சாலையில் விழுந்த பால்ராஜ் லேசான காயமடைந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத பீட்டர் பிராங்க்ளின் வீட்டுக்குள் சென்று கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் தூக்கி போட்டு உடைத்தார். அதில் டிவி, கதவு, ஜன்னல் கண்ணாடி, சோபா இருக்கைகள், நாற்காலிகள், பாத்திரங்கள் என்று எதுவும் தப்பவில்லை.

மேலும் பெரிய பாறாங்கல்லை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்ற பீட்டர் பிராங்க்ளின் கழிவறைக்கு சென்று கல்லை போட்டு சேதப்படுத்தினார். இதையடுத்து பீட்டர் பிராங்க்ளின் அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது வீட்டுக்கு உள்ளே சென்ற பால்ராஜ் வீடு முழுவதும் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பால்ராஜ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பீட்டர் பிராங்க்ளின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதீத மதுபோதையில் அங்கு வந்த பீட்டர் பிராங்க்ளின் கடும் தகராறில் ஈடுபட்டார். இதனை பால்ராஜ் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பீட்டர் பிராங்க்ளின் வீட்டுக்குள் இருந்த மாமனாரை அலேக்காக தூக்கிச்சென்று நடுத்தெருவில் வீசினார். இதில் உருண்டு சென்று சாலையில் விழுந்த பால்ராஜ் லேசான காயமடைந்தார்.

The post மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Balraj ,Mulankuzhi ,Hepsiboy ,Irenepuram ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் அருகே விவசாயி விஷம் குடித்து சாவு