ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சீசனுக்கு முன்னதாகவே நீர் பனி பொழிவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குளிரும் அதிகரித்துள்ளது. நீலகிரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நீர் பனி பொழியும். அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனி விழ துவங்கும். இச்சமயங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படும். மேலும் தேயிலைச் செடிகள் மற்றும் மலை காய்கறி சாகுபடியும் பாதிக்கும்.
இந்நிலையில், இம்முறை நீலகிரியில் முன்னதாகவே நீர் பனி பொழிவு துவங்கியுள்ளது. கடந்த இரு நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர் செடிகளில் நீர் பனி கண்ணாடி இழைகள் போல் காட்சியளிக்கிறது. முன்னதாகவே நீர் பனி பொழிவதால் தேயிலை விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் இரண்டாவது சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளும் பாதிக்கும் அச்சத்தில் தோட்டக்கலை துறையினர் உள்ளனர். நீர் பனி தாக்கத்தால் குளிரும் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர்.
The post சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.