×
Saravana Stores

காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து டெல்டாவில் 50 இடங்களில் சாலை மறியல்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு


திருவாரூர்: திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: காவிரி டெல்டாவில் கடந்தாண்டு குறுவையை முற்றிலும் இழந்த நிலையில் ஒருபோக சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆகஸ்ட் 7ம் தேதியே மேட்டூர் அணை வறண்டு மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை குறைவாலும் மகசூல் இழப்பை சந்தித்தனர். இந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க முன்வரவில்லை. குறிப்பாக அறுவடை ஆய்வு அறிக்கை என்கிற பெயரில் தற்காலிக வேளாண் பணியாளர்களை கொண்டு அளவீடு செய்து உண்மைக்கு புறம்பாக காப்பீட்டு நிறுவனங்கள் தனக்கு சாதகமான வகையில் மகசூல் கணக்கெடுப்பு நடத்தின.

அதன் அடிப்படையில் தற்போது ஒன்றிரண்டு கிராமங்களுக்கு மட்டும் பெயரளவில் இழப்பீட்டை வழங்கி விட்டு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் முறைகேடு செய்துள்ளனர். எனவே காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மகசூல் இழப்பை கணக்கில் கொள்ளும்போது முந்தைய மூன்றாண்டுகள் அறுவடை கணக்கை முன்னிறுத்தி இழப்பீடு மறுக்கப்படும் நிலை தொடர்கிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கலெக்டரின் பேரிடர் மேலாண்மைக்குழு மறு ஆய்வு செய்து உரிய இழப்பீடு நிர்ணயம் செய்து பெற்றுத்தர வேண்டும்.

மகசூல் இழப்பை கலெக்டர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு இறுதி செய்ய வலியுறுத்தி வரும் அக்டோபர் 2ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து டெல்டாவில் 50 இடங்களில் சாலை மறியல்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delta ,BR Pandian ,Thiruvarur ,Thiruvarur, ,Tamil Nadu Cauvery Farmers Association ,General Secretary ,PR ,Pandian ,Cauvery delta ,Mettur ,PR Pandian ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே பரபரப்பு ரோடு ரோலரின் சக்கரம் கழன்று பஸ் மீது மோதியது