சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் விராட் கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், ஜெய்ஷ்வால் ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் 6 ரன்களில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜெய்ஷ்வால் – ரிஷப் பண்ட் ஜோடி இணைந்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து ரன் குவிக்க தொடங்கியது. நிதானமாக விளையாடி வந்த பண்ட் 39 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜெய்ஷ்வால் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிறிது காலமாக ரன் குவிக்க திணறி வரும் கேஎல் ராகுல் இந்த போட்டியிலாவது தன்னை நிரூபிப்பர் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் வாயில் மண் விழுந்தது தான் மிச்சம். அவர் 16 ரன்களில் நடையை கட்டினார்.
இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டிருக்க, ரசிகர்களால் இந்திரன்-சந்திரன் என செல்லமாக அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா-ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டது. குறிப்பாக சொந்த மண்ணின் ரசிகர்கள் முன்னால் அஸ்வின் மாயாஜாலம் காட்டினார்.
இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடி வந்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்து அமர்களப்படுத்தினார். இறுதியில் இன்றைய நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
The post வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா appeared first on Dinakaran.