×
Saravana Stores

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: குரூப் 4 தேர்வு 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நிலையில், வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமில்லை. எனவே தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பணியிட எண்ணிக்கையை 15,000 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் – 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை! appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 4 ,Pamaka ,Ramadas ,Chennai ,Tamil Nadu government ,Bamaka ,Dinakaran ,
× RELATED குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!!