×
Saravana Stores

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

தென்காசி: பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பதன் காரணமாக ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.61 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் ஏலம் மூன்று முறை அறிவிப்பு வெளியிட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. பழைய குற்றாலம் அருவி பகுதியை மூன்று அரசு துறையினர் பராமரித்து வருகின்றனர். பழைய குற்றாலம் அருவிப்பகுதியானது வனத்துறையிடம் இருப்பதாக கூறப்பட்டாலும் நீர்வளத்துறையினர் தான் அருவிப்பகுதியில் உள்ள கடைகள், விவசாய நீர் பங்கீடு மேலாண்மை, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை பராமரித்து வருகின்றனர். அருவிப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கார் பார்க்கிங் பகுதியை ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. எனவே பழைய குற்றாலம் விவகாரத்தில் மூன்று அரசு துறைகளுக்கு இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் குற்றாலம் ஐந்தருவி போன்று வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது.

கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமத்தை ஊராட்சி நிர்வாகம் நீதிமன்றம் சென்று தான் நீர்வளத்துறையிடம் இருந்து கைப்பற்றியது. அருவி பகுதி பராமரிப்பையும் குற்றாலம் ஐந்தருவி போன்று உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் தற்போது வரை நீர் வளத்துறையிடம் தான் பராமரிப்பு பணி உள்ளது. நீர்வளத்துறையை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அங்கு உள்ள கட்டிடங்களுக்கு வெள்ளை அடித்து பெயரளவிற்கு பராமரிப்பது போன்று காட்டிக் கொள்கின்றனர். கட்டிடங்களின் நிலைமை சுமாராகவே உள்ளது. இந்த கட்டிட ஏலம் மூலம் கிடைக்கும் வருவாய் நீர்வளத்துறைக்கு செல்கிறது.

பழைய குற்றாலம் அருவிப்பகுதிகளில் அவசர காலங்களில் ஊராட்சி நிர்வாகமே தலையிட்டு சில பணிகளை மேற்கொள்கிறது. இது ஒருபுறம் இருக்க பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நெல்லையை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இரவு 8 மணி வரை என நீட்டிக்கப்பட்டது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

பழைய குற்றாலம் அருவியில் தற்போது வனத்துறை செக்போஸ்ட் அமைத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறதா என்பதை சோதனையிட்டு அவ்வாறு இருந்தால் பறிமுதல் செய்து அனுப்புகின்றனர். சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை இத்தகைய சோதனை வரவேற்கத்தக்கது. ஆனாலும் புதிதாக விதிக்கப்பட்டுள்ள இரவு நேர தடை என்பது பழைய குற்றாலம் அருவியை வனத்துறை எத்தகைய முயற்சி மேற்கொண்டாவது கைப்பற்றி விடும் என்பதால் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வணிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இரவு நேர குளியல் தடையால் ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக கடந்த 2022ம் ஆண்டு ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் சார்பாக விடப்பட்ட கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் ரூ.48 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.56 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு 10 சதவீதம் தொகை கூடுதலாக வைத்து சுமார் ரூ.61 லட்சத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ஊராட்சி சார்பில் மூன்று முறை ஏல அறிவிப்பும் செய்யப்பட்டது. எனினும் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போதைய நிலையில் ஆயிரப் பேரி ஊராட்சி நிர்வாகமே தற்காலிக பணியாளர் மூலம் கார் பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.25 லட்சம் அளவிற்கு மட்டுமே வசூல் ஆகியுள்ளது.

சீசன் காலம் நிறைவடைந்த நிலையில் இனி வரும் நாட்களில் பெரிய அளவில் வசூல் இருக்காது. சீசன் சமயத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்வசாதாரணமாக ஒரு நாள் வசூல் என்பது ரூ.50 ஆயிரத்தை தாண்டி விடும் நிலையில் தற்போது ரூ.3 ஆயிரம் என்ற அளவில் தான் வசூல் உள்ளது. இரவு நேர குளியல் தடை ஒரு காரணமாக கூறப்பட்டாலும் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் நடந்தே செல்ல வேண்டும் என்பதால் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் சிரமத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக பலரும் சொந்த வாகனங்களில் பழைய குற்றாலம் வருவதை தவிர்க்கின்றனர்.

அத்துடன் குற்றாலம் ஐந்தருவி ஆகியவை அருவிப்பகுதி வரை அனுமதிக்கப்படுவதால் அதிக அளவில் மெயினருவிக்கும், ஐந்தருவிக்கும் செல்கின்றனர். பழைய குற்றால அருவிப்பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் கூட அனுமதிக்கப்படுவது இல்லை. ஆட்டோக்கள் இயக்கப்பட்டாலும் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து அருவிக்கு செல்வதற்கும் பின்னர் அருவியில் இருந்து கார் பார்க்கிங் வருவதற்கும் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை. இது போன்ற காரணங்களால் ஆயிரப்பேரி ஊராட்சிக்கு வரவேண்டிய வருவாய் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் கடும் அவதி
பழைய குற்றால அருவியில் இரவு நேர குளியல் தடை காரணமாக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் பறிபோகிறது. ஏனெனில் கடைகள் இரவில் இயங்குவதில்லை. பழைய குற்றாலம் விடுதிகளில் இரவு நேரம் பெருமளவு தங்குவதே இல்லை‌. ஏனெனில் விடுதிகளில் தங்கி இருந்து இரவு சற்று நெருக்கடி இல்லாமல் குளிக்கலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த ஆண்டு பழைய குற்றாலம் விஷயத்தில் எடுக்கப்பட்ட பல மாற்றமான முடிவுகள் பல வகையிலும் ஆயிரப்பேரி ஊராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க என்ன செய்யலாம்
தற்போது வனத்துறை சோதனை சாவடி சுற்றுப்புற சூழலைப் பொறுத்தவரை பலன் அளித்தாலும், இதே சோதனை சாவடியை ஊராட்சி நிர்வாகத்தை கொண்டே நடத்தலாம். ஊராட்சி நிர்வாகம் மூலம் சில பேட்டரி வாகனங்களை வைத்து பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கார்பார்க்கிங் பகுதியில் இருந்து அருவிப்பகுதிக்கு அழைத்துச் சென்று வரலாம். புலி அருவி, ஐந்தருவி, மெயினருவி ஆகியவற்றில் அருவி பகுதி வரை வாகனங்கள் சென்று திரும்பும் நிலையில் பழைய குற்றாலத்திலும் கார்பார்க்கிங் பகுதியை விஸ்தரிப்பு செய்து அருவிப்பகுதி வரை அனுமதிக்க வேண்டும் என்பதும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

The post பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு appeared first on Dinakaran.

Tags : Panchayat administration ,Tenkasi ,Aayirapperi panchayat administration ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!