தேன்கனிக்கோட்டை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கலெக்டர் சரயு நேற்று அஞ்செட்டி ஒன்றியம் சாக்கலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சமையல் கூடத்தை பார்வையிட்ட அவர், மாணவர்களுக்கு வழங்க தயார் செய்த உணவுகளையும், சமையலுக்கு தேவையான பொருட்களின் இருப்புகளை ஆய்வு செய்து, சமையல் கூடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தேவகவுண்டன் தொட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் ₹32.80 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கட்டுமான பணி மற்றும் அஞ்செட்டி அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை கலெக்டர் பார்வையிட்டார். கடந்த கல்வியாண்டில் விடுதியில் தங்கி 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தக்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு குறித்த புகார் பெட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் மினி பஸ் இயக்கம் விரைவில் துவங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். கோட்டையூர் ஊராட்சியில், இருளர் இன மக்களுக்கு பிரதமர் ஜென்மன் திட்டத்தின் கீழ், தலா ₹5.73 லட்சம் வீதம் கோட்டையூர் மலைக்கிராமத்தில் 14 வீடுகள், நூர்ந்துசாமி மலை கிராமத்தில் 6 வீடுகள் மற்றும் ஜோடுகரை மலை கிராமத்தில் 4 வீடுகள் என மொத்தம் 24 வீடுகளுக்கு ₹1 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அஞ்செட்டி தாலுகா அலுவலகத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் எஸ்பி தங்கதுரை, டிஆர்ஓ சாதனைக்குறள், சப்கலெக்டர் பிரியங்கா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அஞ்செட்டி மலை கிராமங்களில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.