×
Saravana Stores

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

அண்ணா நகர்: வில்லிவாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 8வது மண்டல அலுவலகத்தில் நேற்று முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் சுமார் 700 வீடுகள் உள்ளன. இவற்றில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 114 வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, அண்ணா நகர் 8வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் 114 வீடுகளையும் இடிப்பதற்காக ஏற்கனவே அங்கு வசிப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை வில்லிவாக்கம் சத்யா நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்யா நகர் பகுதி பொதுமக்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் அண்ணா நகர் 8வது மண்டல அலுவலகத்திற்கு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தங்களது வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாது என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் எதிர்ப்பை மீறி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை அப்புறப்படுத்தினால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனக்கூறி ஆவேசமாக பேசியதால் மண்டல அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் சத்யா நகர் பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், ‘‘சென்னை வில்லிவாக்கம் சத்யா நகர் பகுதியில் 114 வீடுகள் ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால் 700 வீடுகள் உள்ளன. 114 வீடுகளை மட்டும் ஏன் இடிக்க வேணடும் என்று கேள்வி எழுப்பினோம். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்வதாக கூறிவிட்டு மக்களின் எதிர்ப்பை மீறி வீடுகளை அகற்றினால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பு இடம் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் மிகவும் பழமைவாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடம் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் உள்ளது. அதில் 600 சதுர அடி இடத்தை கோபி என்பவர் ஆக்கிரமித்து, முதல் தளத்துடன் வீடு கட்டி, கடந்த 20 வருடங்களாக பயன்படுத்தி வந்தார். இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு குறிப்பிட்ட கோயில் நிலம் வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் திருவேங்கடம், பெரம்பூர் சரக ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், வழக்கறிஞர் விஜய் கணேஷ் மேற்பார்வையில் மேலாளர் தனசேகர், கணக்கர் நந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அந்த இடத்தில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி கோயில் இடத்தை அதிரடியாக மீட்டனர். முதல் தளத்துடன் சேர்ந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ₹50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து முதல் தளத்துடன்கூடிய அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு அதன் முழு உரிமையும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

The post வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Villivakkam ,Sathya Nagar ,Zonal ,Anna Nagar ,Villivakam ,8th zone office ,Villivakkam Sathya Nagar ,Zonal Office ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே...