திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் ஓணம் பண்டிகையை ஆலப்புழாவிலுள்ள தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். இதன் பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் தன்னுடைய பெற்றோர், தம்பி ராகுல் மற்றும் மகன் சாய் கிருஷ்ணா ஆகியோருடன் ஆலப்புழாவிலிருந்து கொச்சிக்கு காரில் சென்றார். காரை நவ்யா நாயரின் தம்பி ராகுல் ஓட்டினார். ஆலப்புழா அருகே பட்டணக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஹரியானா மாநில பதிவெண் கொண்ட ஒரு லாரி சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை நவ்யா நாயர் உடனடியாக அந்த லாரியை முந்திச் சென்று மடக்கிப் பிடிக்குமாறு தம்பி ராகுலிடம் கூறினார். உடனடியாக அவர் வேகமாக காரை ஓட்டிச் சென்று அந்த லாரியை மடக்கினார்.
இதற்கிடையே நவ்யா நாயர் நெடுஞ்சாலை போலீசுக்கு போன் செய்து விவரத்தை கூறினார். போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்த சைக்கிளில் சென்ற வாலிபரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்த போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து நடிகை நவ்யா நாயர் கூறியது: கண்ணெதிரே ஒரு விபத்து நடந்து அதை கவனிக்காமல் சென்றால் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் நிலை என்ன ஆகும் என்று நான் ஒரு கணம் சிந்தித்தேன். அதனால்தான் விரைந்து செயல்பட்டு போலீசுக்கு விவரத்தைக் கூறி விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியைப் பிடிக்க உதவினேன் என்றார்.
The post சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர் appeared first on Dinakaran.