ஜலாலாபாத்: பஞ்சாப்பில் மணி பர்சை திருடிய திருடன், அதில் இருந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபருக்கு தபாலில் அனுப்பி வைத்த ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலாலாபாத்தில் உள்ள கங்கா கலான் கிராமத்தில் வசிக்கம் ஜஸ்விந்தர் சிங் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் அமிர்தசரஸ் சென்றிருந்தார். அங்கு அடையாளம் தெரியாத சிலர் ஜஸ்விந்தர் சிங்கின் மணி பர்ஸ், முக்கிய ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.7,000 பணத்தை திருடிச் சென்றனர். ஜஸ்விந்தர் சிங் தனது வீட்டுக்கு வந்தபின்னர் தான், தனது மணி பர்ஸ் மாயமான போன விபரம் தெரிய வந்தது. திருட்டு சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியாததால், போலீசாரிடமும் அவர் புகாரளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜஸ்விந்தர் சிங்குக்கு தபால் ஒன்று வந்தது. அந்த தபாலை வாங்கிய ஜஸ்விந்தர் சிங், அதன் உறையை திறந்து பார்த்தபோது, அதில் அவரது ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தன. தனது திருட்டு போன மணி பர்சுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், தபால் மூலம் வீட்டிற்கு வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்தார். ஆனால் மணி பர்சில் வைத்திருந்த ரூ.7,000 தபாலில் வரவில்லை.
இருந்தாலும் தனது ஆவணங்கள் கிடைத்ததால் ஜஸ்விந்தர் சிங் மகிழ்ச்சி அடைந்தார். அதேநேரம் திருடனின் பெருந்தன்மையைக் கண்டு ஜஸ்விந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திருடனிடம் மனிதாபிமானம் உள்ளது. ஆவணங்களை திருப்பி அனுப்பிய அவருக்கு நன்றி’ என்றார்.
The post பஞ்சாப்பில் இப்படியொரு ஆச்சரியம்; திருட்டு தொழிலிலும் ஒரு நேர்மை வேணும்: ஆவணங்களை தபாலில் அனுப்பி வைத்த திருடன் appeared first on Dinakaran.