செங்கல்பட்டு: செங்கல்பட்டில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 10 நாள் தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சங்களான சிறிய, பெரிய ராட்டினங்கள் லாரிகளில் வந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். செங்கல்பட்டு நகரப் பகுதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மைசூரில் தசரா விழாவைப் போல், இங்கும் 10 நாட்களுக்கு தசரா விழா மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இது, செங்கல்பட்டு மாவட்ட மக்களின் அடையாளமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டில் வரும் அக்டோபர் 2ம் தேதி கொடியேறத்துடன் செங்கல்பட்டில் 10 நாள் தசரா விழா நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இத்திருவிழாவின்போது நடைபெறும் சந்தை கண்காட்சியின்போது, குழந்தைகளை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்களான சிறிய, பெரிய வகை ராட்டினங்கள் நேற்று மாலை லாரிகளில் வந்து, அவற்றை நிர்மாணிப்பதற்கு தயார்நிலையில் காத்திருக்கின்றன. மேலும், செங்கல்பட்டில் தசரா விழாவின்போது சின்னம்மன் கோவில், ஓசூரம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் மலர் அலங்காரங்களுடன் அம்மன்களின் வீதியுலாவுடன் 10 நாட்களும் தசரா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து, 10 நாள் தசரா விழாவை தங்கியிருந்து கொண்டாடுகின்றனர். விஜயதசமியன்று உற்சவர் அம்மன் சிலைகளுக்கு துர்கா வேடமிட்டு, வாணவேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க வீதியுலா நடைபெறும். இரவு 10 மணியளவில் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில், வன்னி மரத்தில் அம்பு எய்து, சூரனை துர்கா வேடமிட்ட அம்மன்கள் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
தசரா விழா நடைபெறும் இடங்களில் சிறிய, பெரிய ராட்டினம் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, செங்கல்பட்டில் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட நகர போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், செங்கல்பட்டில் தசரா விழா எப்போது நடைபெறும் என்று மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
The post தசரா பண்டிகை 10 நாள் கொண்டாட்டம் செங்கல்பட்டுக்கு ராட்டினங்கள் வருகை appeared first on Dinakaran.