×
Saravana Stores

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்: இரவில் தங்கி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த சில வருடங்களாக தமிழ் மாதங்களில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. அன்றிரவு கடற்கரையில் தங்கி விட்டு அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். இதனால் மிகப்பெரிய பலன் கிடைக்கிறது என்பதால் பவுர்ணமி இரவு வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் கடந்த சித்ரா பவுர்ணமி துவங்கி வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாத பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதப்பிறப்பான நேற்று பகல் 11.22 மணிக்கு துவங்கிய பவுர்ணமியானது இன்று (18ம் தேதி) காலை 9.04 மணி வரை இருந்தது. மேலும் மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலையிலே பக்தர்கள் திருச்செந்தூர் வர துவங்கினர். நேற்றும் அதிகாலை முதலே பேருந்துகள், ரயில்கள் மற்றும் கார், வேன்களில் பக்தர்கள் குவிய துவங்கினர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜை நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை முதல் இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர். அவர்கள் இன்று அதிகாலை முதல் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுவாமியை வழிபட்டனர். இதனால் கோயில் வளாகம் மட்டுமின்றி கடற்கரையே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வரிசைப்பாதைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான கூடுதல் போலீசார் ஈடுபட்டனர்.

The post புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்: இரவில் தங்கி சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Murugan temple ,Puratasi ,Swami ,Tiruchendur ,Swamy ,Tiruchendur Subramanya Swamy Temple ,Tiruchendur Murugan Temple ,Darshan ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...