×
Saravana Stores

சதுர்த்தி விழாவில் உற்சாகம்; விநாயகருக்கு நைவேத்தியம் செய்த 4 லட்டுகள் ரூ1.87 கோடிக்கு ஏலம்: ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய முடிவு


திருமலை: விநாயகர் சதுர்த்தி விழாவில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்த 4 லட்டுகள் ரூ1.87 கோடிக்கு பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிறகு சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று விஜர்சனம் (கரைப்பு) செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பண்ட்லகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் லட்டுகள் அதிக விலைக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் பூஜையில் வைத்து வழிபட்ட லட்டுகள் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினரும் பங்கேற்றனர். 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்த 4 லட்டுகள் ஏலம் விடப்பட்டது. இதை போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். இதில் 4 லட்டுகள் மொத்தம் ரூ1.87 கோடிக்கு ஏலம் போனது.
இதுகுறித்து சொசைட்டி தலைவர் மகேந்தர்ரெட்டி கூறியதாவது: விநாயகர் சிலை வைக்கப்பட்ட 4 இடங்களில் கடந்த 2021ல் ரூ60 லட்சத்துக்கு விற்பனையான லட்டு, 2022ல் ரூ126 கோடிக்கு விற்கப்பட்டது. இம்முறையும் பக்தர்கள் அதிக விலை கொடுத்து லட்டு வாங்கியுள்ளனர்.

அதன்படி 4 லட்டுகள் தலா ரூ35 லட்சம், ரூ31.50 லட்சம், ரூ26 லட்சம், ரூ32.25 லட்சம் என ஏலத்தில் எடுத்தனர். மொத்தம் ரூ1.87 கோடிக்கு லட்டு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் கிடைத்த பணம் சொசைட்டி சார்பில் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும், புத்தகங்கள் வாங்கி தரவும் பயன்படுத்தப்படும் என்றார். இதேபோல் ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள மைஹோம் வில்லாவில் ஒருவர் ரூ29 லட்சத்திற்கும், ஐதராபாத் பாலாபூர் லட்டு ஒருவர் ரூ30 லட்சத்துக்கும் லட்டுகளை ஏலத்தில் வாங்கினர்.

The post சதுர்த்தி விழாவில் உற்சாகம்; விநாயகருக்கு நைவேத்தியம் செய்த 4 லட்டுகள் ரூ1.87 கோடிக்கு ஏலம்: ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Vinayakar ,Thirumalai ,Swami ,Vinayagar Chaturthi ,Vinayagar Chaturthi Festival ,Vinayagar ,Chaturthi Festival ,Naivedim ,
× RELATED சாத்தூர் பகுதியில் பாலங்களில் வண்ணம் பூசும் பணி தீவிரம்