கம்பம்: கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து கம்பம் உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வேளாண் வணிகம் சார்பில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் இந்த உழவர்சந்தையில் காய்கறி வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் உழவர்சந்தையில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை வேளாண் துறை துணை இயக்குநர் மிர்சி பிரபாகரன் நேற்று முன்தினம் கம்பம் உழவர்சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாடிக்கையாளர்களிடம் உழவர்சந்தையின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். உழவர்சந்தை நிர்வாக அலுவலரால் நிர்ணயிக்கப்படும் விலை பட்டியலுக்கு கூடுதலாக காய்கறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் உழவர்சந்தையில் கிழக்கு வாசல் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆலமர விழுதுகளை அகற்றவும், உழவர்சந்தையின் மேற்குவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவறையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். ஆய்வின் போது உழவர்சந்தை நிர்வாக அலுவலர், உதவி நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்; கம்பம் உழவர்சந்தையில் வேளாண் அதிகாரி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.