பெரியகுளம்: பெரியகுளம் அருகே மலைக் கிராமங்களில் நடைபெற்று வரும் சாலை பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேல், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அகமலை ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத நிலையில் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து சென்றும், குதிரைகளில் விவசாய விளைபொருட்களையும், உணவு பொருட்களையும் கொண்டு சென்றும் வந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு சோத்துப்பாறை அணையில் இருந்து முதற்கட்டமாக 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கருங்கற்களான சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மலை கிராம மக்கள் கருங்கற்கள் சாலை மீது சிமெண்ட் சாலை அமைத்தால் மட்டுமே சாலை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின் போது போடி வட்டாட்சியர் மற்றும் போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.
The post மலைக் கிராமங்களில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய சாலை: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.