பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், சுமார் 2 ஏக்கரில் 45 ஆண்டுக்கு முன்பு காவலர் குடியிருப்புக்கு என 3 மாடி அடுக்காக மொத்தம் 200க்கும் மேற்பட்ட வீடுகள் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டன. இந்த குடியிருப்பில், பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட மேற்கு, கிழக்கு தாலுகா, வடக்கிபாளையம், மகாலிங்கபுரம், நெகமம், கோமங்கலம், ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
ஆனால், இந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தின் சில பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆண்டிற்குள் பெயர்ந்து விழ ஆரம்பித்தது. குடியிருப்பில் உள்ள பல வீடுகளில் மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, கம்பிகள் வெளியே தெரிந்தது. இதன் காரணமாக, அங்கு குடியிந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து 80 குடும்பத்தினர் மட்டுமே வசித்தனர். இந்நிலையில் பழுதான நிலையில் உள்ள காவலர் குடியிருப்பை அப்புறப்படுத்தி, அதில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவலர் குடியிருப்பில் வசித்து வந்தோருக்கு, அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்று இடத்திற்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அந்த குடியிருப்பில் வசித்த சில போலீஸ் குடும்பத்தினரும், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காலி செய்து ஆங்காங்கே வாடகை வீடுகளில் குடிபெயர்ந்தனர். காவலர் குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்தவர்கள் அனைவரும் காலி செய்ததால், 3 ஆண்டுக்கு முன்பு பழுதான காவலர் குடியிருப்பு முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. விரைந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, சுமார் 2 ஆண்டுக்கு முன்பே, காவலர் குடியிருப்பு இருந்த இடத்திலேயே, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் 9 அடுக்குகளுடன் நவீன முறையில் சுமார் 260 வீடுகள் கொண்ட புதிய காவலர் குடியிருப்பு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதே பகுதியில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ தலைமை காவலர், போலீசார் என தனித்தனி பிரிவாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சியில் புதிய காவலர் குடியிருப்பு ரூ.72 கோடியில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும், தற்போது புதர்கள் சூழ்ந்து காடுபோல் உள்ள, குடியிருப்பு கட்டப்படும் பகுதியை சீர்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் கூறுகையில், ‘பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் மண்டபம் பின்புறம் இருந்த, பழுதான காவலர் குடியிருப்பு இடிக்கப்பட்டு புதர் சூழ்ந்தவாறு உள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார், தற்போது தனியார் வீடுகளிலும், ஆனைமலையில் உள்ள குடியிருப்புகளிலும் கூடுதல் வாடகை செலுத்தி வசித்து வரும் சூழ்நிலையில், பொள்ளாச்சியில் விரைந்து காவலர் குடியிருப்பு கட்டி கொடுக்க முன்வர தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், ஏற்கனவே குடியிருப்பு இருந்த இடத்திலேயே புதிய காவலர் குடியிருப்பு கட்ட ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, காவலர் குடியிருப்பை எவ்வாறு விரைந்து கட்டுவது என கேட்டறிந்து சென்றுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ரூ.72 கோடியில் புதிய காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய காவலர் குடியிருப்பு கட்டப்படும் என்ற நம்பிக்கை எழுந்தாலும், கட்டுமான பணி துவங்கினால் மட்டுமே உறுதி என என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொள்ளாச்சி மையப்பகுதியில் புதிய காவலர் குடியிருப்பு கட்டுமான பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post பொள்ளாச்சியில் புதிய காவலர் குடியிருப்பு ரூ.72 கோடியில் 260 வீடுகள் நவீன முறையில் கட்ட நடவடிக்கை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.