புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘இந்த வழக்கில் நேரலை செய்யப்படுவதால் வழக்கு குறித்த பல்வேறு விவகாரங்கள் திரித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றியும், தன்னைப் பற்றியும் தவறான சமூக வலைதளப் பதிவுகள் பரவுகிறது.
மேலும் வழக்கு தொடர்பாக ஆஜராகும் பெண் வழக்கறிஞர்கள் பலருக்கும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் நேரலை என்பது பொதுமக்களின் உரிமை ஆகும். விசாரணையை நேரலை செய்வதை நிறுத்த முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?.விசாரணை எந்த அளவில் நடந்தது போன்ற பல்வேறு கேள்விகளை நாங்கள் சிபிஐ அமைப்பிடம் முன்னதாக கேட்டிருந்தோம். இவை அனைத்திற்கும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை அறிக்கையில் பதில் கிடைத்துள்ளது.
குறிப்பாக வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா, குற்றவாளியை கண்டறியும் வியூகம் என்ன, வழக்கில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது அனைத்திற்கும் பதில் கிடைத்துள்ளது. மேலும் பெண் மருத்துவர் மரணம் தொடர்பான விவகாரத்த்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சியாகவும், கண் கலங்கும் விதமாகவும் உள்ளது. அதன் விவரங்களை வெளியிட்டால் விசாரணையின் போக்கு பாதிக்கும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை நாங்கள் வழங்க உத்தரவிட்டிருந்தோம். ஆனால் அதனை கொல்கத்தா காவல்துறை முழுமையாக இன்னமும் சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை. அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கொல்கத்தா காவல்துறை, சிபிஐ விசாரணை அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்த்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், ‘‘ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை இருக்கும் முழு வீடியோ காட்சிகளையும் நாங்கள் வழங்கி விட்டோம், சிபிஐ இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறது என்ரு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதிகாரிகள் இடமாற்றம்: கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய ஜூனியர் டாக்டர்கள் – முதல்வர் மம்தா இடையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போலீஸ் கமிஷனர், 2 சுகாதாரத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* மம்தாவுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
பயிற்சி பெண் மருத்துவர் மரணம் தொடர்பான விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக உத்தரவிட வேண்டும் என்று நேற்றைய விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்தார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘உச்ச நீதிமன்றம் என்பது அரசியல் மன்றம் கிடையாது. ஒரு மாநிலத்தின் முதல்வரை பதவி விலக நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது.
இதே கோரிக்கை கொண்ட வாதங்களை தொடர்ந்து முவைத்தால் விசரணை அறையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். பட்டிமன்றத்தில் பேசுவதைப் போல நீதிமன்ற அறையில் பேசு கூடாது. நீதிமன்ற அறையில் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என கடுமையாக எச்சரித்து, அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
* பெண் டாக்டர்கள் இரவில் ஏன் பணிபுரியக் கூடாது
பாதுகாப்பு கருதி இரவுப் பணியை பெண் மருத்துவர்கள் தவிர்க்குமாறு மேற்கு வங்க அரசு கூறியிருந்தது. இது பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் கூறுகையில், பெண்கள் இரவில் பணியாற்ற முடியா து என்று எப்படி சொல்லலாம். பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை . அவர்கள் சமவாய்ப்புகளையே கோருகின்றனர். இரவுப் பணியில் உள்ள பெண்மருத்துவர்களுக்கு அரசு கண்டிப்பாக பாதுகாப்பு வழங்க வே ண்டும். அதுதான் உங்கள் கடமை . அதை விடுத்து அவர்கள் இரவுப் பணிக்கு வரக்கூடாது என்று சொல்லக் கூடாது. இது தொடர்பாக மேற்கு வங்க அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும்,’ என்று உத்தரவிட்டது.
The post கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாநில காவல்துறைக்கு உத்தரவு; உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.