×
Saravana Stores

எல்லா போட்டியும் முக்கியம்… – இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா; பயிற்சியில் உற்சாகம்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் மட்டுமல்ல, வங்தேசத்துக்கு எதிரான போட்டியையும் முக்கியமாக கருதுகிறோம். நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதுதான். எங்களைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும், தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. ஐசிசி உலக டெஸ்ட் கோப்பை பைனலுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அப்படியே உள்ளன. எனவே அதனை இலக்காக கொண்டு விளையாடுவோம். ஆடும் அணியை தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எல்லாவிதத்திலும் சிறந்தவர்களை தேர்வு செய்வது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்ப வெற்றியை இலக்காக கொண்டு வீரர்களை தேர்வு செய்வோம். அதை மீறிய விஷயங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை.

வீரர்களுக்கு விளையாட்டு வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது இயல்பு. ஒரு கேப்டனாக கே.எல்.ராகுல் அணியில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அவரது சமீபத்திய ஆட்டம் கவனிக்கதக்கது. ஜெய்ஸ்வால், கில், ஜுரெல், சர்பராஸ் சிறப்பாக விளையாடுகின்றனர். நான் 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். பல்வேறு பயிற்சிக் குழுக்களை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி அணுகுமுறைளை வைத்திருப்பார்கள். முடிவுகளை எடுப்பார்கள். டிராவிட் தலைமையிலான ரத்தோர், மாம்ப்ரே குழுவினரின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. இப்போது கம்பீர் தலைமையில் அபிஷேக், மார்கெல் குழுவின் செயல்பாடுகள் புது மாதிரியாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

* நெருக்கடி எப்போதும் ஒரு வரம்… – வங்கதேச அணி தலைமை பயிற்சியாளர் சண்டிக ஹத்துருசிங்க
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் பெற்ற தொடர் வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது. அதற்கு வெற்றி மட்டும் காரணமல்ல. அந்த 2 டெஸ்டிலும் ஆரம்பித்தில் நாங்கள் எவ்வளவு பின்தங்கியிருந்தோம், கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாண்டோம், அதிலிருந்து எப்படி மீண்டோம் என்பதுதான் எங்கள் உற்சாகம், நம்பிக்கைக்கு காரணம். இரண்டும் எங்களுக்கு இந்தியாவை எதிர்கொள்வதற்கான வலுவை தந்துள்ளது. நெருக்கடி தான் எப்போதும் வரம் என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இந்தியாவை எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது தான் முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான ஊக்கம், உத்வேகம் கிடைக்கும். ‘டைகர்’ திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்த பல்வேறு உள்நாட்டு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

எங்கள் அணியிலும் திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பின்வரிசை வீரர்களும் சதம் விளாசியுள்ளனர். விக்கெட் கீப்பர்கள் முக்கியமான பேட்ஸ்மேன்களாக உள்ளனர். எனவே இந்தியாவுக்கு எதிரான தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். குறிப்பாக ஷாகிப், மிராஸ் மேம்பட்ட கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். அனுபவ வீரர்கள் மட்டுமின்றி நஹித் ராணா போன்ற புதுமுகங்களும் பொறுப்புணர்ந்து விளையாடுவது அணிக்கு பலம். சென்னை அரங்கின் மைய ஆடுகளம் நன்றாக உள்ளது. அதன் தன்மை மாறுமா என்பது போகபோகத்தான் தெரியும். எங்கள் அணியில் காயம் பிரச்னையில்லை. வீரர்கள் நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர்.

The post எல்லா போட்டியும் முக்கியம்… – இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா; பயிற்சியில் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : India ,Rohit Sharma ,England ,Australia ,Bangladesh ,ICC World Test Cup… ,Dinakaran ,
× RELATED ரோகித்சர்மா, கோஹ்லியின் பார்ம் பற்றி...