புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி சார்பில் நாளை (18ம் தேதி) மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்.,- பாஜ அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே கடந்த செப்.2ம் தேதி மின் கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் விளைவாக, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் முதல் 200 யூனிட் வரை அரசு மானியம் வழங்குவதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இருப்பினும், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது, பிரீப்பெய்டு மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நாளை (18ம் தேதி) மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்தன. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, இந்தியா கூட்டணி தலைவர்கள் தினமும் வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து, லாரி உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சமூக அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று (17ம் தேதி) மாலை 5 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்று கூடி, நேரு வீதி வழியாக சென்று கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகளிடம் ஆதரவு கேட்க உள்ளனர்.
The post மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த் appeared first on Dinakaran.