×
Saravana Stores

தி.மலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியான இன்று காலை முதலே உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்த பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இங்கு 2,668 உயரமுள்ள மலையே மகேசன் திருவடிவமாகும். அதனால், அண்ணாமலையை (கிரி) வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். அதிலும் குறிப்பாக, பவுர்ணமி நாளன்று கிரிவலம் சென்று வழிபடுவது கூடுதல் பலன் தருவதாகும். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று காலை 11.22 மணிக்கு தொடங்கி நாளை (18ம் தேதி) காலை 9.04 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமி காலை 11.22மணிக்கு தொடங்கினாலும் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்தது. பவுர்ணமியொட்டி நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் மாட வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் ெசய்தனர். இன்று மாலைக்கு பிறகு பக்தர்களின் வருகை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு பொதுதரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வரிசையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3ம் பிரகாரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரிலும், கோயிலுக்கு வெளியே ராஜகோபுரம் எதிரே பக்தர்களின் வசதிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கவில்லை. வேலூர்-திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

The post தி.மலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Krivalam ,T.malai ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Ninnamulaiyamman ,Sametha Annamalaiyar ,Puratasi month ,Agni ,Panchabhuta ,Dinakaran ,
× RELATED புரட்டாசி மாத பவுர்ணமி; தி.மலையில் 2வது...