*ஆங்காங்கே விரிசல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம்
நெல்லை : பாளை மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோயில் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்தும், விரிசல்கள் நிறைந்தும் காணப்படுகின்றனர். அத்துடன் ஆங்காங்கே விரிசலும் இருப்பதால் அச்சத்தில் தவிக்கும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் விரைவில் செப்பனிடப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாநகரில் வயல்வெளிகள் நிறைந்த பகுதியாக மூளிக்குளம் மற்றும் வெள்ளக்கோயில் பகுதிகள் உள்ளன. மாநகரை ஒட்டி இருந்தாலும் மூளிக்குளம் பகுதியை சுற்றிலும் அதிகமான வயல்வெளிகள் காணப்படுவதால், கிராமங்களை பார்ப்பது போலவே இருக்கும். மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோயில் செல்லும் சாலையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு பயன்பாடு மிக்க இச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே இருபக்கமும் மூலை மடை ஓடை செல்வதற்காக சுவர்கள் கட்டப்பட்டிருந்தன.
காலப்போக்கில் மூலை மடை அருகே கட்டப்பட்டிருந்த சுவர்கள் உடைந்து ஓடைக்குள்ளே விழுந்துவிட்டன. அதையொட்டி செல்லும் சாலையில் சில இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டது போல காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் சாலை உடைந்திருப்பது தெரியாமல் அதில் விழுகின்றனர். மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோயில் வரை சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலையில் ஆங்காங்கே உடைப்புகள் காணப்படுகின்றன.
இதனால் சேதமடைந்த இச்சாலையில் லாரிகள் செல்லும்போது, எதிரே வரும் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் இருசக்கரவாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் அச்சாலையை கடக்க சிரமப்படுகின்றன. எனவே, சேதமடைந்து காணப்படும் இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மூளிக்குளம்- வெள்ளக்கோயில் சாலை செப்பனிடப்படுமா? appeared first on Dinakaran.