*25 மாணவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்
கண்டாச்சிபுரம் : விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 25 மாணவ, மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் பிரபல தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேர் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த 2 கார்கள் திடீரென நின்றன.
அவ்வழியே பொதுமக்கள் சாலையை கடந்ததால் கார்கள் நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து தனியார் பள்ளி பேருந்தும் நிறுத்தப்பட்டது. அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்து எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சேதமடைந்தது. உள்ளே இருக்கைகளில் அமர்ந்திருந்த 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 மாணவர்களுக்கு அதிக காயம் இருந்ததால் அவர்கள் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறிது நேர ஓய்வுக்கு பின் மாற்று பேருந்தில் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து 2 பேருந்து டிரைவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து appeared first on Dinakaran.