*மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை
ஜலகண்டாபுரம் : ஜலகண்டாபுரம் அடுத்து சூரப்பள்ளியில், இறுதி ஊர்வலத்தின் போது, பட்டாசு வெடித்ததில், 6 பேர் காயடைந்த நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி கிராமம், சோரையான் வளவு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (90). இவர் வயது மூப்பின் காரணமாக கடந்த 5ம் தேதி, காலமானார். இதையடுத்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வந்தனர்.
இறுதி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக மூட்டை நிறைய பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தனர். இந்நிலையில், ஊர்வலத்தில் வானவெடி பட்டாசு வெடித்த போது, எதிர்பாராத விதமாக மொத்தமாக வாங்கி வைத்திருந்த பட்டாசு மூட்டையின் மேல் தீப்பொறி பட்டது. இதில், அனைத்து பட்டாசுகளும் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இதை சற்றும் எதிர்பாராத ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த வெடி விபத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வமணி (50), செல்வராஜ் (44), தனபால், செல்வம் மகன் கண்ணன் (28), செல்வம் மகன் ரவி (28) மற்றும் பூலாம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் (75) ஆகியோருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் 70 சதவீதம் காயடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூலாம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் (70), சோரையான் வளவு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (44) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர். மற்ற 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து உடல் கருகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பலி appeared first on Dinakaran.