×
Saravana Stores

தொடர் விடுமுறையால் குவிந்தனர் கொடைக்கானலில் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. இன்று மிலாடி நபி விடுமுறையால் நேற்றும் ெகாடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். குறிப்பாக ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்தவர் வருகை சற்று கூடுதலாகவே உள்ளது. கொடைக்கானலில் இரண்டாம் சீசன் காரணமாக மழை, வெயிலின்றி இதமான சூழல் நிலவுகிறது.

சுற்றுலாப்பயணிகள் இந்த இதமான சூழலை ரசித்தபடி செல்கின்றனர். குணா குகை பகுதியில் குவிந்தவர்கள் அங்குள்ள ராட்சத மரங்களின் வேர்களில் அமர்ந்து புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மோயர் பாயிண்ட், தூண் பாறை பகுதிகளில் கண்ணாமூச்சு காட்டும் வெண் பஞ்சு மேகங்களை கண்டு ரசித்தனர். ஏரியில் செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தபடி குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உற்சாகமாய் படகு சவாரி செய்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சியில் பரவலாக விழும் நீரின் முன்பு நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.கொடைக்கானலின் ஸ்பெஷலான ஹோம் மேட் சாக்லேட், செடியுடன் கூடிய காரட் மற்றும் பல்வேறு வகையான பழங்களையும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஹவுஸ் புல் ஆகின.

பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடங்களில் ஒன்று பேரிஜம் பகுதியாகும். வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்றே இப்பகுதிக்கு செல்ல முடியும்.
இந்த பகுதியில் தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரியின் கழுகுப்பார்வை பகுதி, அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளை கவரும் இடங்கள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பேரிஜம் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். நேற்று முன்தினம் யானை கூட்டம் இடம் பெயர்ந்ததை அடுத்து சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.நேற்று மீண்டும் யானை நடமாட்டம் பேரிஜம் பகுதியில் காணப்பட்டதால், யானைகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதியும் அப்பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

மறுஅறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என்றும், யானைகள் இந்த பகுதியை விட்டு இடம்பெயர்ந்த பின்னர் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பேரிஜம் பகுதிக்கு செல்வதற்காக வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

The post தொடர் விடுமுறையால் குவிந்தனர் கொடைக்கானலில் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’ appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Princess of the Hills' ,Dindigul district ,Milady Nabi ,Ekadaikanal ,Onam festival ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் அழுகிய...