- பெர்யார்
- காங்
- மல்லிகார்ஜுனா கர்கே
- கன்னிமொழி எம். பி. எஸ்.
- அமைச்சர்
- உதயநிதி
- சென்னை
- கன்னிலோஜி எம். பி.
சென்னை: தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளில் பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால் உச்சரிக்கப்படும் பெயராக தந்தை பெரியார் உள்ளது. தந்தை பெரியார் என்ற பெயருடன் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:
கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுதான் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் என்றார் தந்தை பெரியார். மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி, சமத்துவத்துக்காக போராடிய தந்தை பெரியாரைப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற எம்பி கனிமொழி:
“It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform”- Constitution of India
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
ஈராயிரம் ஆண்டு மடமைக்கு எதிரான ஈரோட்டுப் பூகம்பம் – பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த நாள் இன்று.
பழமை சிந்தனைகளால் பாதுகாக்கப்பட்ட அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவு கொண்டு சுட்டெரித்த சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார் இன்றைக்கும், என்றைக்கும் நம் தமிழ்நாட்டின் அடையாளம்.
உடலால் மறைந்தாலும்; என்றும் மறையாத – எக்காலமும் பொருந்துகிற திராவிடத் தத்துவமாய் நம்மோடு வாழ்கின்ற பெரியாரின் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும் – ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம்.
சமூகநீதி நாள் போற்றுவோம்!
தந்தை பெரியார் வாழ்க!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post தந்தை பெரியார் 146-வது பிறந்த நாள்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி வாழ்த்து!! appeared first on Dinakaran.