×

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ விசாரணை கைதி உயிரிழப்பு

வேலூர், செப்.17: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ விசாரணை கைதி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ் அகமது (42). கூலித்தொழிலாளியான இவர் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனை வெளியே சொன்னால் உன்னையும், உங்க அம்மாவையும் கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது சிறுமி 4 மாதம் கர்ப்பம் என தெரியவந்தது.

இதையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த வாரம் அனீஸ் அகமதை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அனீஸ் அகமதுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபோது திடீரென நேற்று அனீஸ் அகமதுக்கு (42) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ விசாரணை கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Vellore Central Jail ,Vellore ,Bagayam ,Anees Ahmed ,Peranamptu ,Vellore district ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு..!!