- சாம்சங்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் கலெக்டர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சாம்சங் தொழிலாளர்கள் நேற்று, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து, தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும், ஆலைக்குள் நிறுவனத்திற்கு ஆதரவான கமிட்டியில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும்,
வேலை நிறுத்த போராட்டத்தில் சுமுக தீர்வு காண கலெக்டர் நேரடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்று மனு கொடுக்க இருந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் நகரம் முழுவதும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் உள்ள சிஐடியு அலுவலகத்திலிருந்த சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக ஆங்காங்கே இருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளர்களை போலீசார் ஆங்காங்கே மடக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். போராட்டத்திற்காக வந்த 120க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தனர். மேலும், காலையில் கைது செய்யப்பட்ட முத்துக்குமாரை மாலை வரை எங்கு வைத்திருக்கிறோம் என்பதைக்கூட போலீசார் தெரிவிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, சிஐடியு மாநில கவுரவ தலைவர் அ.சவுந்தர்ராசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து, சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு வழங்கினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், விவசாய சங்க செயலாளர் கே.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
* பிரச்னைக்கு தீர்வு காண முதல்வரை சந்திக்கவும் தயார்: சிஐடியு அ.சவுந்தரராசன் பேட்டி
காஞ்சிபுரம் பத்திரிகையாளர் அரங்கில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் நிருபர்களிடம் கூறியதாவது: சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் கடந்த மாதத்துக்கு முன்பு தொழிலாளர் உரிமைகளுக்காக அமைக்கப்பட்ட சங்கத்தை கலைக்க வேண்டும் அல்லது அதை கடுமையாக உடைக்க வேண்டும் என்று நிர்வாகம் கடுமையான முயற்சிகளை செய்கிறது. மேலும், தொழிலாளர்களை மிரட்டி இடமாற்றம், பணியிட மாற்றம் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதை எதிர்க்கும் தொழிலாளர்களை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்து, நிர்வாகம் அமைக்கும் கமிட்டியில் சேர நிர்ப்பந்திக்கின்றனர். தொழிலாளர்களுக்காக போராடிய முத்துக்குமாரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தோம் என்கிறது போலீசார். அவரை எங்கு வைத்துள்ளனர் என்று அவரது குடும்பத்திற்கே தெரியப்படுத்த மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 8 மணி நேர வேலை என்பதை 11 மணி நேரமாக வேலை செய்ய தொழிலாளர்களை நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.
அப்படி செய்தால் 2 மடங்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அவர்கள் நடைமுறைப்படுத்த தயாராக இல்லை. மொத்தத்தில் இது தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து முறையிட உள்ளோம். தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை கூட நாங்கள் நேரில் சந்தித்து தொழிலாளர் பிரச்னையை பேச தயாராக உள்ளோம் அல்லது அரசியல் கட்சி ஆதரவையும் கோர உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது appeared first on Dinakaran.