* 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம், போக்குவரத்து கடும் பாதிப்பு
பூந்தமல்லி: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து தறிகெட்டு ஓடியது, தடுப்புகளை தாண்டி எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்ேடா டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கி மாநகர பேருந்து (தடம் எண் 104) 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை டிரைவர் ஆரோக்கிய ராஜேஷ் ஓட்டி வந்தார். நடத்துநர் சரவணன் பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்து வந்துள்ளார். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் மதுரவாயல் அடுத்த வானகரம், ஓடமா நகர் அருகே நேற்று பிற்பகலில் பேருந்து வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு பைபாஸ் சாலையிலிருந்து சரிவில் வேகமாக இறங்கி சர்வீஸ் சாலையில் தறி கெட்டு ஓடியது.
அப்போது சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது பேருந்து மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்று நின்றது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதில் ஆட்டோவை ஓட்டி வந்த மாதவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் (45) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒருவரோடு ஒருவர் மோதியும் கம்பிகளில் இடித்துக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் மதுரவாயல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான ஆட்டோ டிரைவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கிரேன் கொண்டு பேருந்து மற்றும் ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரவாயல் தொகுதி கணபதி எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு பேருந்து நடத்துநர் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார்.
The post தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு appeared first on Dinakaran.