×
Saravana Stores

திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட 10 புதிய டிரான்ஸ்பார்மர்களை சா.மு. நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் சில டிரான்ஸ்பார்மர் அதிக மின்பளுவுடன் இருப்பது தெரிய வந்தது. மேலும் கடைமுனை பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடும் ஏற்படுகிறது.

சில இடங்களில் மின்பாதைகளின் நீளம் அதிகமாக உள்ளதாலும், பல நுகர்வோர்கள் அந்த மின்பாதையில் இருந்து ஒரே நேரத்தில் மின்சாதனங்களை பயன்படுத்துவதாலும் கடைமுனை மின்நுகர்வோருக்கு குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டது. அதன்படி, ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தை தவிர்க்க ரூ.50 லட்சம் மதிப்பில் 10 புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

இதனையடுத்து, பிரகாஷ் நகர் 3வது தெரு, 5வது தெரு, 5வது குறுக்குத் தெரு, 6வது தெரு, 6வது குறுக்குத் தெரு, 7வது தெரு, 12வது தெரு, 13வது தெரு, 14வது தெரு, திருமலா நகர் ஆகிய 10 பகுதிகளிலும் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை நேற்று ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இதில் நகரச் செயலாளர் ரவி, ராஜி, ரமேஷ், விமல், சுரேஷ்குமார், வழக்கறிஞர் வினோத், துர்கா பிரசாத், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

* வார்டு சபை கூட்டம்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி, அண்ணாநகர் 21வது வார்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வார்டு சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சா.மு.நாசர் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள பட்டாபிராம் மேம்பாலம், டைட்டில் பார்க் ஆகியவற்றை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். தரமான தார்சாலை, கால்வாய், பாதாள சாக்கடை, குடிநீர், கூடுதலாக ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும்.

சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து தீர்வு காணப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் மேயர் ஜி.உதயகுமார், மாநகர ஆணையர் கந்தசாமி, மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், மண்டல தலைவர் ஜோதிலட்சுமி நாராயனபிரசாத், பகுதிச் செயலாளர் நாராயண பிரசாத், பொன் விஜயன், ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruninnavur ,CM Nasser MLA ,Avadi ,Avadi Assembly Constituency ,Nasser ,MLA ,CM ,Nasser MLA ,Dinakaran ,
× RELATED ஜெயா பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்