பூந்தமல்லி: பூந்தமல்லியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட போக்குவரத்து காவல் நிலைய கட்டிடத்தை ஆவடி துணை ஆணையர் திறந்து வைத்தார். பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு தனியாக காவல் நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. மேலும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறிய அறையில் போக்குவரத்து காவல் நிலையம் இயங்கி வந்தது. இதனால் பூந்தமல்லி போக்குவரத்து போலீசுக்கென்று தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி மேம்பாலத்தின்கீழ் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமை தாங்கினார். பூந்தமல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமௌலி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையர் அன்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதில், பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசி ஹெல்மெட்டுகளை துணை ஆணையர் அன்பு போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, போக்குவரத்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களை பாதுகாத்து வரும் போக்குவரத்து போலீசார், தங்களது உடல் நலனிலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி கூறினார்.
The post பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு ரூ.30 லட்சத்தில் புதிய காவல் நிலைய கட்டிடம்: ஆவடி துணை ஆணையர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.