சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை மீறுபவர்களிடம் இருந்து ரூ.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தடைசெய்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும். தடைக்கு கூடுதலாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றானவற்றை ஊக்குவிப்பதற்கும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதன் மூலமும் மாநிலம் பன்முக அணுகுமுறையை கையாண்டு வருகிறது.
‘மீண்டும் மஞ்சப்பை’ – ‘பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான அழைப்பு’ என்ற தலைப்பில் ஒரு மாநில பிரசாரம், பாரம்பரிய இயற்கை அடிப்படையிலான தீர்வுகளுடன் ‘தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் பிரச்சாரம்’ என்ற பெயரில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக்கிற்கு எதிரான மாற்று பொருட்களை விளம்பரப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலினால் 2021 டிசம்பர் மாதம் பிரசாரம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட ‘மீண்டும் மஞ்சப்பை பிரசாரம்,’ பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2.2 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், கடந்த அக்டோபர் 30ம் தேதி, சென்னையில் மஞ்சப்பை படைப்பிரிவை அறிமுகப்படுத்தியது. இதில் இரண்டு மின்சார கார்கள் மற்றும் 6 மின்சார இரு சக்கர வாகனங்கள் அடங்கும். இந்த படைப்பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வழி செய்துள்ளது. மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை மேம்படுத்தவும், துணிப் பைகளை வழங்கும் புதுமையான மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
மாநிலம் முழுவதும் அதிக அளவில் மக்கள் நடமாடும் 188 இடங்களில் நிறுவப்பட்ட இந்த இயந்திரங்கள் கிட்டத்தட்ட 3,85,000 பைகளை இதுவரை விநியோகித்துள்ளன. மாநிலம் முழுவதும் 16 லட்சத்துக்கும் அதிகமான ஆய்வுகள் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 2600 டன் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதியை மீறுபவர்களிடம் இருந்து ரூ.19 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை பிரசாரம், விழிப்புணர்வு, அமலாக்கம் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிலையான நடைமுறைகளை வெற்றிகரமாக ஊக்குவித்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பதை குறைத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிளாஸ்டிக் பயன்பாட்டு விதியை மீறுபவர்களிடம் ரூ.19 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்; தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.