மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை கடல் சீற்றம் காரணமாக, சுமார் 5 அடி உயரத்துக்கு மேல் அலைகள் எழும்பி கரையில் வந்து மோதின. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதில் அச்சமடைந்து உள்ளனர். மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக, சுமார் 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி, கரையை நோக்கி வேகமாக முன்னேறி வந்து மோதின. இதனால் மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை வரையிலான மீனவ குப்பங்களை சேர்ந்த சுமார் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு அச்சமடைந்து உள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாள்தோறும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் இன்று காலை முதல் கடல் சீற்றத்தினால் அலைகள் வேகமாக முன்னேறி கரையை நோக்கி மோதி வருவதால், அங்கு சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு வந்து பொழுது போக்குவதில் அச்சப்படுகின்றனர். மேலும், கரையை நோக்கி வேகமாக வந்த அலைகள், அங்குள்ள கடற்கரை உணவகங்களையும் தாக்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் அலைகளின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள், தங்களின் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். மாமல்லபுரத்தை பொறுத்தவரை, தற்போது பகல் நேரங்களில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும், இன்று காலை கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் மீனவர் குப்பம் கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை வரை கடல் சீற்றமாக அதிகரித்து காணப்படுவதால், அப்பகுதி மீனவர்களும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
The post கடல் சீற்றத்தால் 5 அடி உயரம் எழும்பிய அலை: மாமல்லபுரத்தில் மீனவர்கள் அச்சம் appeared first on Dinakaran.