செங்கோட்டை: செங்கோட்டை அருகே வடகரையில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய குளத்தில் யானைகள் குளித்து கும்மாளமிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் அவ்வபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலையடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இவற்றை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டும் பலனளிக்கவில்லை.
கடந்த சில நாட்களாக வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, வாவா நகரம் ஆகிய பகுதிகளில் விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி, குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் இரவு, பகலாக வனப்பகுதியில் முகாமிட்டு யானைகளை விரட்டினர். இந்த யானைகளை ஒரு பகுதியில் விரட்டும் போது மற்றொரு பகுதியில் இடம் பெயர்ந்து விடுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி செங்கோட்டை அருகே வடகரை பகுதியில் 5க்கும் மேற்பட்ட யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சத்தம் எழுப்பியும், வெடி வைத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே விளைநிலங்களுக்கு புகுந்தது. நேற்று காலை 2 யானைகளும் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்று குளித்து கும்மாளமிட்டன. யானைகள் குளத்தில் குளிப்பதை விவசாயிகள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபகாலமாக வடகரையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வரும் சூழலில் அவற்றால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செங்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து குளத்தில் கும்மாளமிட்ட யானைகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.