×
Saravana Stores

சின்னாளப்பட்டியில் உள்ள சலவை கூடம் புதுப்பிக்கப்படுமா?

*தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

நிலக்கோட்டை : சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சின்னாளபட்டியில் சலவை கூடத்தை புதுப்பித்துதர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னாளபட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சலவைத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் ஆபத்தான நிலையில் சலவை பணி செய்துவந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சின்னாளபட்டி பிரிவில் கடந்த 1972ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் போர்வெல் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய சலவை கூடம் அமைத்துத் தரப்பட்டது.

இதனையடுத்து சின்னாளபட்டி பகுதி தொழிலாளர்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள சாமியார்பட்டி, அம்பாத்துரை, ஜெ.புதுக்கோட்டை, செட்டியபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சலைவை கூடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், முறையான பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளி ரவி கூறுகையில், ஒரு காலத்தில் ஆபத்தான நிலையில் ஏரி, குளம், கண்மாய் மற்றும் குட்டைகளில் துணிகளை சலவை செய்து வந்தோம். அப்போதைய திமுக அரசு, எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஊரின் ஒதுக்குப்புறமாக அனைத்து வசதிகளுடன் சலவை கூடம் அமைத்து கொடுத்தது. இக்கூடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் தற்போது கடுமையாக சேதமடைந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள், வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை சலவை கூடம் பகுதியில் வெளியேற்றுவதாலும், குப்பைகளை கொட்டுவதாலும் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பலர் சலவை கூடத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர்.

எனவே ஏற்கனவே உள்ள சலவைகூடத்தை தேய்ப்புக்கூடம், காம்பவுண்ட் சுவருடன் கூடிய நவீன சலவைக்கூடம் அமைத்துத்தர சங்க கூடம் சார்பிலும் தொழிலாளர்கள் சார்பிலும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். அதேபோல தமிழக அரசும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சின்னாளப்பட்டியில் உள்ள சலவை கூடம் புதுப்பிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Nilakottai ,Dinakaran ,
× RELATED கல் குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க கூடாது