*அமைச்சர், எம்பி தொடங்கி வைத்தனர்
நாமக்கல் : காலத்திற்கு பயன் தரும் வகையில், காவிரிக்கரையில் ஒரு கோடி பனை மரங்கள் நடும் பணியை அமைச்சர், எம்பி மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூர் ஊராட்சி, காவிரி கரை பகுதியில் நேற்று, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர், மாவட்ட கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில், காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, காலத்திற்கும் பயன்தரும் தமிழ்நாட்டு மரமான பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும். இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி, ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 308 ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், பள்ளி, கல்லூரி வளாகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், ஏரிகள், வாய்க்கால் கரையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,53,450 பனை விதைகள் நடும் பணியை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி, கலெக்டர் உமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 7,460 விதைகள், எருமப்பட்டி ஒன்றியத்தில் 6,400, கபிலர்மலை ஒன்றியத்தில் 6,000, மல்லசமுத்திரத்தில் 7200, மோகனூர் ஒன்றியத்தில் 6,500, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 6200, ராசிபுரம் ஒன்றியத்தில் 6,000, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 5,400, திருச்செங்கோடு ஒன்றியத்தில் 6,600, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6,400 என மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில், 308 ஊராட்சிகளில் 378 இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 32,200 பனைவிதைகள் நடப்படுகின்றன.
வேளாண்மை துறை சார்பில் 14,000 பனை விதைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 28,000 பனைவிதைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் சார்பில் 14,000 பனை விதைகள் என மொத்தம் 88,200 பனைவிதைகள் நடும் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நாமக்கல் டிஎஸ்பி ஆகாஷ் ஜோசி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராசு, வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா, நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமசந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (நாமக்கல்) ரகுநாதன், கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன். தன்னார்வலர் விஸ்வநாதன், சித்ரா, பிரகாஷ், ராஜசேகர், தில்லை சிவக்குமார், சுற்றுச்சூழல் அமைப்புகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
The post சுற்றுச்சூழலை காக்கும் வகையில் காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி appeared first on Dinakaran.