×
Saravana Stores

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த கிராம தேவதை கோவிலானது கடந்த 1998 ஆம் ஆண்டு அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இருந்தபோதிலும் அவ்வப்போது இந்த கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்வதில் இரு பிரிவினரிடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு செய்யப்பட்ட போது பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. என்னும் அந்த பிரச்சனை தற்காலிகமாக முடிவுற்ற நிலையில் கடந்த மாதம் எட்டியம்மன் ஆலயமானது புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பட்டியலின மக்கள் இந்த ஆலயத்திற்குள் வந்து சாமி தரிசனம் செய்ததற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தங்களுக்கு சொந்தமான பாதையில் பட்டியலின மக்கள் ஆலயத்திற்கு வரக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் எட்டியம்மன் ஆலயத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பட்டியலின மக்களை வழிபாடு செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆலயம் சீல் வைக்கப்பட்டிருந்த சூழலில் வருவாய் துறையினர் தொடர்ந்து இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தையின் போது சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பட்டியலின மக்கள் அவர்கள் கிராமத்திலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துவர பட்டனர். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலையில் கோவிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு தற்போது பட்டியலின மக்கள் ஆலயத்திற்குள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு மாதகாலமாக மூடப்பட்டிருந்த கோவிலுக்கு பூசாரி பூசணிக்காய் சுற்றி, திருஷ்டி கழித்து பூஜைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் தலைமையில் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது இந்த கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Etiyamman temple ,Prudalambedu ,Kummidipundi ,Thiruvallur ,Etiamman temple ,Parudalambedu ,Sami ,Arulmigu ,Etiyaman Temple ,Parudalambedu Village ,Sami Darshan ,
× RELATED சிந்தலகுப்பம் பகுதியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு