×
Saravana Stores

வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்: விண்வெளியில் வயலின் இசைத்து மகிழ்ந்த விண்வெளி பொறியாளர்

புளோரிடா: விண்வெளியில் மனிதர்கள் நடக்கும் முதல் வணிக ரீதியிலான திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் ஒரு வீரர் தான் சென்ற விண்கலத்தை விட்டு வெளியே வந்து விண்ணில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை விண்வெளி நடை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1965ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளனர்.

இவை அனைத்தும் ஆய்வு நோக்கத்திற்கானவை ஆனால் விண்வெளி வீரர் அல்லாத பொதுமக்களை விண்வெளியில் நடக்க வைக்கும் திட்டத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜாரக் ஐசக், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் சாரா கிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்த அன்னா மேனோன், விண்கலத்தின் பைலட் ஆன ஸ்கார் போடீட் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டனர்.

டிராகன் விண்கலம் மூலம் சுமார் 1400 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்ற நால்வரும் பின்னர் அங்கிருந்து படிப்படியாக இரங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையை சுற்றி வந்தனர். அங்கு விண்கலத்தில் இருந்து வெளியே வந்த தொழிலதிபர் ஜாரக் ஐசக் விண்வெளியில் சுமார் 15 நிமிடங்கள் நடந்தார். அவரை தொடர்ந்து மற்ற மூவரும் விண்வெளி நடையை மேற்கொண்டனர். 5 நாட்கள் விண்வெளியிலேயே செலவழித்த நால்வரும் 40 விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

விண்வெளியில் இருக்கும் போது மனித உடலில் கதிர் இயக்கம் பரவுமா என்பது குறித்தும் மனித உடலில் நுண்ணிய புவி ஈர்ப்பு விசையின் தாக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். விண்கலத்தில் இருந்தபடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பொறியாளர் சாரா கிலிஸ் வயலின் இசைத்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கேப்சூல் எனப்படும் சிறிய விண்கலம் மூலம் நால்வரும் பூமிக்கு திரும்பினர்.

பிளோரிடா மாகாணத்தில் உள்ள கடலில் பாராசூட்களின் உதவியோடு அந்த விண்கலம் பத்திரமாக விழுந்தது. போலாரிஸ் டாவ்ன் என்று பெயரிடப்பட்டு இந்த பயண திட்டத்தின் மூலம் பலநூறு கிலோமீட்டர் உயரத்தில் வணிக ரீதியிலான விண்வெளி நடை நிகழ்வை சாத்திய படுத்திய முதல் தனியார் ராக்கெட் நிறுவனம் என்ற சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது.

 

The post வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்: விண்வெளியில் வயலின் இசைத்து மகிழ்ந்த விண்வெளி பொறியாளர் appeared first on Dinakaran.

Tags : Space X ,Florida ,Elon Musk ,
× RELATED எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய லண்டனை...