×
Saravana Stores

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மருத்துவமனை மாஜி முதல்வருக்கு நாளை வரை சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷ், காவல்துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகியோரை நாளை வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீதி கேட்டும், ஆர்ஜி கர் மருத்துவமனையில் உள்ள சில உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல்நிலைய பொறுப்பதிகாரி அபிஜித் மண்டல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயன்றதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் காவல்நிலைய அதிகாரி அபிஜித் மண்டல் மீது சம்பவம் குறித்து எப்ஐஆர் பதிவு செய்வதில் காலதாமதம், சம்பவத்தை மறைக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 3 நாள்(நாளை வரை) சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மருத்துவமனை மாஜி முதல்வருக்கு நாளை வரை சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Kolkata ,Baladkara ,Sandeep Ghosh ,Abhijit Mandal ,RG Khar Govt ,Kolkata, West Bengal ,chief minister ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம்...