×
Saravana Stores

விசிக சாதிக்கட்சி இல்லையா? மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி திருமாவளவன் எல்கேஜிதான்: அன்புமணி கடும் தாக்கு

அவனியாபுரம்: மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள், திருமாவளவன் எல்கேஜிதான் படித்திருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி தாக்கியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாமக சாதி கட்சி என திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்? பாமக சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கென 20 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மதுஒழிப்பு தொடர்பாக நாங்கள் பிஎச்டி படித்துள்ளோம். திருமாவளவன் எல்கேஜி தான் படித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின்பு தான் மதுவிலக்கு பற்றி திருமாவளவன் பேசுகிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பே ராமதாஸ் மதுவிலக்கு குறித்து பேசி வருகிறார். மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறி வருகிறோம்.

சுற்றுச்சூழலுக்காகவும், நீர்நிலைகளுக்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பாமக. இப்படி எல்லாம் எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்களின், கட்சியின் அடிப்படை கொள்கை. நாடு முழுவதும் மதுவிலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தேசிய கல்வி கொள்கையை பாமகவும் எதிர்க்கிறது
பாமக தலைவர் அன்புமணி , விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்யாமல் ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் ஒரு சிலவற்றை பாமகவும் எதிர்க்கின்றது’’ என்றார்.

The post விசிக சாதிக்கட்சி இல்லையா? மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி திருமாவளவன் எல்கேஜிதான்: அன்புமணி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Anbumani ,Avaniyapuram ,BAMA ,Bamaka ,Madurai airport ,Visika ,
× RELATED கால்பந்து திடல்களை தனியாரிடம்...