சேலம்: பொங்கலுக்கு முந்தைய நாள் ரயில்களில் பயணிக்க மக்களிடம் ஆர்வமில்லை. இதனால், சென்னையில் இருந்து முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் இன்னும் இடமிருக்கிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி வருகிறது. இதனை தங்களது சொந்த கிராமங்களில் கொண்டாட நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் புறப்பட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக பஸ், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். ரயில் பயணத்தை பொருத்தளவில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பதால், பொங்கலுக்கு முந்தைய 10, 11, 12, 13ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.
இதில், பொங்கலுக்கு முந்தைய 10, 11, 12ம் தேதிக்கான பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் திட்டமிட்டு, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டனர். இதனால், அந்த தேதிகளில் இயங்கும் ரயில்களில் இடமில்லை. பெரும்பாலான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 200ஐ கடந்து விட்டது. இந்நிலையில் பொங்கலுக்கு முந்தைய நாளான 13ம் தேதி (திங்கட்கிழமை) பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வழக்கமான இந்த நாளில் பயணிக்க மக்களிடையே போட்டி இருக்கும். ஆனால், நடப்பாண்டு ஒருநாளுக்கு முன்புள்ள நாட்களில் பயணிக்க பெரும்பாலானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டதால், பொங்கலுக்கு முந்தைய நாள் பயணத்திற்கு ஆர்வமில்லை. காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், 5 மணி நேரத்தை கடந்தும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், சேலம், கோவை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும் இயங்கும் ரயில்களில் மிக மெதுவாகவே டிக்கெட் முன்பதிவு நடந்தது.
குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், கோவை மற்றும் கேரளா செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி, திருவனந்தபுரம் மெயில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் 50 முதல் 100க்கும் அதிகமான இருக்கைகள் காலியாக இருக்கிறது. பகல் நேரத்தில் இயங்கும் கோவை இன்டர்சிட்டி உள்ளிட்ட சில ரயில்களில் 350க்கும் அதிகமாக இருக்கைகள் உள்ளது. இதேபோல், சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் ரயில்களிலும் காலியிடம் உள்ளது.
மிக குறைந்த அளவில் அந்த இருக்கைகள் உள்ளன. இரவு நேரத்தில் இயங்கும் ரயில்கள், நிரம்பிவிட்ட நிலையில், பகலில் செல்லும் ரயில்களில் மட்டும் காலியிடம் இருக்கிறது. மறுமார்க்கத்தை பொருத்தளவில், கோவை, சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்களில் பெரும்பாலானவற்றில் இருக்கைகள் அதிகளவு உள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் வழியே நாகர்கோவில் செல்லும் ரயிலில் 150 இருக்கைகள் காலியாக உள்ளது. அதேபோல், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்களிலும் காலியிடம் உள்ளது. அந்த ரயில்களும் நிரம்பவில்லை. பொங்கல் பயணத்தை கடைசி நேரத்தில் இறுதி செய்யும் மக்களால் இன்னும் ஓரிருநாளில் ஜனவரி 13ம் தேதிக்கான ரயில்கள் அனைத்தும் நிரம்பும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post முன்பதிவு தொடங்கி 5 மணி நேரம் கடந்தும் காலியிடம்; பொங்கலுக்கு முந்தைய நாள் ரயிலில் பயணிக்க மக்களிடம் ஆர்வமில்லை appeared first on Dinakaran.