×
Saravana Stores

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்களிப்பு தான் காரணம்: வீராங்கனை துளசிமதி முருகேசன் பெருமிதம்

திருவள்ளூர்: திருவள்ளூர்  நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டு பூப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, பூப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ், பூப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நித்ய சிவன் ஆகிய 4 பேருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் ப.விஷ்ணு சரண் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் எம்.பரணிதரன், இயக்குனர் அருள் அரசு முன்னிலை வகித்தனர்.

பூப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருவள்ளூர் நிகேதன் பள்ளியின் முன்னாள் மாணவி மனிஷா ராமதாஸ் கூறும்போது, ‘’இந்த பள்ளியில் கடந்தாண்டு 12 ம் வகுப்பு முடித்த நான், இந்தாண்டு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொள்வதில் மிகுந்த பெருமை கொள்கின்றேன். என்னை இந்த அளவிற்கு உயர்த்திய எனது பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இந்திய அளவில் சாதனைபுரிய வைத்த எனது முன்னாள் விளையாட்டு பயிற்சியாளர், உலக அரங்கில் சாதனை படைக்க செய்த இந்நாள் பயிற்சியாளர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் கூறும்போது, ‘’சிறுவயதில் இருந்து சுமார் 13 ஆண்டுகள் எனது தந்தை பயிற்சி அளித்தார். இந்த பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். வெள்ளிப் பதக்கம் பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு தான் காரணம். கல்லூரியில் இருந்து பேட்மிட்டன் பயிற்சி பெறுவதற்கு உதயநிதி ஸ்டாலின் உதவியதன் காரணமாகவே இந்த கோப்பை சாத்தியமானது’’ என்றார்.

மாரியப்பன் தங்கவேலு கூறும்போது, ‘’விளையாட்டாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் பயப்பட வேண்டாம். ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே சாதித்ததாக அர்த்தம். எண்ணத்தை செயலாக்கம் செய்துவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பாரா ஒலிம்பிக் போட்டியில் தேர்வு ஆவது மிகவும் கடினம். 2011 ஒலிம்பிக்கில் தேர்வான போதிலும் பாஸ்போர்ட் இல்லை. அப்போது யாரும் எனக்கு உதவி செய்யாத காரணத்தினால் நான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதன் பிறகு தேர்வான 3 பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளேன். தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்டோம். இதில் 4 வீரர்கள் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான பாதைக்கு இளைஞர்கள் செல்வதற்கு முன்னாள் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்களை விளையாட்டு படிப்பு போன்ற எண்ணத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள், பயணப்படி, உணவு மற்றும் சிறந்த பயிற்சியாளர்களை கொடுக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் அரசு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கிறது’’ என்றார்.

The post பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்களிப்பு தான் காரணம்: வீராங்கனை துளசிமதி முருகேசன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Para Olympics ,Minister ,Udayanidhi Stal ,Tulsimathi Murugesan ,Tiruvallur ,Niketan Matriculation High School ,Tulasimathi Murugesan ,Paris ,Tamil Nadu ,Mariyappan Thangavelu ,
× RELATED சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு