×
Saravana Stores

இ-பாஸ் நடைமுறையால் ஓணம் கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: தங்கும் விடுதிகள் வெறிச்சோடின

ஊட்டி: இ-பாஸ் நடைமுறையில் உள்ளதால் ஓணம் பண்டிகையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், குன்னூர் டால்பின்நோஸ், லேம்ஸ் ராக் காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வருவது வழக்கம்.

குறிப்பாக, முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதற்கு அடுத்தப்படியாக 2ம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். குறிப்பாக, அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்ேத அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். 2ம் சீசன் போது, ஓணம் பண்டிகை விடுமுறையின் போது, கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஓணம் பண்டிகை துவங்கும் இரு நாட்களுக்கு முன்னரே ஊட்டியை இவர்கள் முற்றுகையிடுவர்கள்.

தொடர்ந்து, ஓணம் பண்டிகை முடிந்த பின், 10 நாட்கள் வரை கேரள மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிடுவார்கள். இதனால், இங்குள்ள ஓட்டல்கள், காட்டேஜ்கள் மற்றும் அனைத்து வகையான தங்கும் விடுதிகளும் நிரம்பி வழியும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகளால் வாகன நெரிசல் காணப்படும். இதனால், ஓணம் விடுமுறையின் போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும். ஆனால், இம்முறை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவ ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு இ பாஸ் முறையை அறிமுகம் செய்தது.

மேலும், கோடை சீசன் ேம மாதத்துடன் முடிந்த போதிலும், செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதை கடந்த 4 மாதங்களாக தவிர்த்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாகவே ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நேற்று முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயரும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

காவல்துறையினரும் போக்குவரத்து சீரமைப்பு போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் இ-பாஸ் நடைமுறையே என வியாபாரிகள் பலரும் தெரிவிக்கின்றனர். இ-பாஸ் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நிலையில், ஊட்டிக்கு வருவதை தவிர்த்துவிட்டு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், நீலகிரியில் சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

The post இ-பாஸ் நடைமுறையால் ஓணம் கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: தங்கும் விடுதிகள் வெறிச்சோடின appeared first on Dinakaran.

Tags : Ounam ,FESTIVAL OF ONAM ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED விதி மீறலில் ஈடுபட்ட 2 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை