×
Saravana Stores

மாட்டு வண்டி பந்தயத்தில் அதிர்ச்சி: காளைகள் மிதித்து தொழிலாளி பலி

மேலூர்: மேலூர் அருகே நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் மிதித்து தொழிலாளி பலியானார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப்பட்டியில் அம்பலகாரன்பட்டி சுந்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம், தும்பைப்பட்டி – சிங்கம்புணரி சாலையில் நடைபெற்றது. பெரிய மாடுகள் பிரிவில் 13 ஜோடிகள் கலந்து கொண்டதில், வெள்ளரிபட்டி அழகு கருப்புச்சாமி, தேனி கூடலூர் சரவணன், வாடிபட்டி முத்தாலம்மன், அவனியாபுரம் முருகன் காளைகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தது.

சிறிய மாடுகள் பிரிவில் 37 ஜோடிகள் கலந்து கொண்டதால், இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பிரிவில் தெற்குதெரு எம்எம்ஏ நண்பர்கள், பாகனேரி புகழேந்தி, ரெத்தின கோட்டை அமரன் பிரதர்ஸ், கொடுக்கம்பட்டி சிவலிங்கம் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இரண்டாவது பிரிவில் தேனி மாவட்டம் பவிவசந்த், மலம்பட்டி அழகர்மலையான், மேலமடை சீமான ராஜா, அ.வல்லாளபட்டி கனகசபை ஆகியோரின் காளைகள் நான்கு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. இப்போட்டிகளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

துப்புரவு தொழிலாளி பலி :

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை பார்ப்பதற்காக, தும்பைப்பட்டி ஊராட்சியின் துப்புரவு தொழிலாளி ராஜா(48). அப்பகுதியில் சாலையோரம் நின்ற வேனில் ஏறினார். அப்போது எதிர்பாராவிதமாக வேனை டிரைவர் எடுத்ததால், அதிலிருந்து ராஜா தடுமாறி கீழே விழுந்தார். அதற்குள் பந்தயம் துவங்கி மாடுகள் சாலையில் ஓட துவங்கின. அப்போது கீழே விழுந்த ராஜா மீது காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மாட்டு வண்டி பந்தயத்தில் அதிர்ச்சி: காளைகள் மிதித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Shock in ,Melur ,Ambalakaranpatti Sundayi Amman Temple Kumbabhishekam ,Thumbaipatti ,Melur, Madurai district ,Dinakaran ,
× RELATED மதுரை அருகே கள்ளங்காடு பகுதியில் வரி விபர கல்வெட்டு கண்டுபிடிப்பு