கார்டிஃப்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டி20 போட்டியில், இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டி20ல் ஆஸி. 28 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கார்டிஃப் நகரில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச… ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.
இளம் வீரர் ஃபிரேசர் மெக்கர்க் 50 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 42 ரன் (26 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), டிராவிஸ் ஹெட் 31 ரன் (14 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட், சாம் கரன், அடில் ரஷித் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஃபில் சால்ட் 39 ரன் (23பந்து, 2பவுண்டரி, 3சிக்சர்) விளாசி நம்பிக்கை அளித்தார். வில் ஜாக்ஸ் (12), ஜார்டன் காக்ஸ் (0) ஏமாற்றமளிக்க, லயம் லிவிங்ஸ்டன் – ஜேகப் பெத்தெல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக 90 ரன் சேர்த்து மிரட்டியது. பெத்தெல் 44 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), லிவிங்ஸ்டன் 87 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினர். இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து வென்று பதிலடி கொடுத்தது. ஓவர்ட்டன் 4, ரஷித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஷார்ட் 5 விக்கெட் அள்ளினார் (3-0-22-5). ஷான் அபாட் 2விக்கெட் எடுத்தார். ஆல் ரவுண்டராக அசத்திய லிவிங்ஸ்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது.
The post ஆஸ்திரேலியாவுடன் 2வது டி20 இங்கிலாந்து பதிலடி: லிவிங்ஸ்டன் அமர்க்களம் appeared first on Dinakaran.